புதன், 9 ஜூன், 2010

குட்டி பூனையும், டிரைவர் ஹீரோவும்


காலை எட்டு மணி, பஸ்சுக்காக காத்திருக்கிறேன். அலுவலகம் செல்ல நேரமாகிவிட்டது. சாலையில் வாகனங்கள் கற்றை கிழித்தபடியும், நேரத்தை விரட்டியபடியும் இரண்டுபக்கமும் சென்றுகொண்டிருந்தது. வித விதமான கார்கள், வாகனங்கள், வித விதமான மனிதர்கள் நேரத்துக்கு கட்டுப்பட்ட இயந்திரங்களாய் நேற்று பாதியில் விட்டு வந்த வேலையை தொடர சென்றுகொண்டிருக்கிறார்கள். கதிரவன் தனது சூடான கரங்களால் சுரீர் என்று அறைந்துகொண்டிருந்தான். வெயில் மேலேற தொடங்கிய நேரம். வியர்வை பிசுபிசுப்பு அதிகமாகிக்கொண்டே வந்தது. என்ன தான் பாடி ஸ்ப்ரே போட்டாலும் அலுவலகம் செல்வதற்குள் நாறிவிடுகிறது, எல்லாம் வெயில் பகவானின் கைங்கர்யம். திடீரென்று வேகமான போக்குவரத்தில் மாற்றம் உண்டானது. 'கிரிச்' 'கிரிச்' என பிரேக் போடுவதும் பின் மெதுவாக நகர்ந்து செல்வதாய்  இருந்தன வாகனகள்.  ஏன் என்ன ஆயிற்று, இங்கு வேக தடை கூட இல்லையே, இந்த சாலையை எப்போதும் சிறப்பாகவே பராமரித்து வருவார்கள், சாலை பழுது என்றுகூட சொல்லமுடியாது. மெல்ல அனைவரின் கவனமும் சாலை மீது விழுந்தது. அதோ, அதோ அங்கே என்ன? இது பூனை குட்டி போலல்லவா  இருக்கிறது. அதிசயமாய் உணர்தேன். இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறைந்த இவ்வளவு வேகமான சாலையின் நடுவில் எப்படி இந்த குட்டி பூனை சென்றிருக்க முடியும். யார் கொண்டுவிட்டிருக்க முடியும். புரியாத புதிராய் இருந்தது. கார்கள் நின்றதும் அந்த குட்டி பூனை சாலையை கடக்க  அதன் வழக்கமான குணத்தால் பதுக்கி பதுங்கி செல்ல முயன்றது, எங்கே பதுங்க முடியும், இருப்பதோ வாகனங்களின்   சக்கரம் மாத்திரமே. வாணலிக்கு பயந்து அடுப்பில் குதித்த கதையாய்  சக்கரங்களின் அடியில்  பதுங்கிய அந்த பூனை குட்டியை  பார்க்க பார்க்க மனம் பதறியது. எப்படியாவது அந்த பூனை குட்டியை காப்பாற்றும் எண்ணத்தோடு  வாகனங்களை கடந்து சாலையின் மைய பகுதிக்கு வந்தடந்தேன். டிரைவரிடம் வாகனத்தை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, காரின் அடியில் குனிந்து  மெல்ல கைகளால் தூக்கினேன். அய்யோ, இத்தனை சிறிய பூனை குட்டிக்கு இவ்வளவு கோபமா,  வாயை  அகலமாக திறந்து அதன் கூர்மையான குட்டி பற்களை வெளியில் காட்டியும், கால்களில் புதைந்து கிடந்த நக கத்திகளை  வெளியில் காண்பித்தும்  கோபமாக சீறியது அந்த குட்டி பூனை. சட்டென்று தூக்கி சாலையின் நடுவில் உள்ள மைய தடுப்பு பாதையில் போட்டேன். அப்பாடா, குட்டி பூனையை காப்பற்றியதில் என்  மனம் லேசாகி சந்தோஷ சாரல் தொற்றிகொண்டது.
அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அந்த குட்டி பூனை திடீரென மீண்டும் சாலையை நோக்கி பாய்ந்தது, நானும்  சூழ்நிலை மறந்து அதை காப்பாற்ற அதன் பின் ஓடினேன், சிறக், கிரிச், என்ற சத்தங்கள், சாலையில் வாகனகள் திடீர் பிரேக் இட்டதால் வந்தவை. நல்லவேளை  பூனை தப்பியது, நானும்தான். திட்ட நினைத்த டிரைவர் பூனைக்குட்டியை கண்டதும், வாயை திறக்கவில்லை. மீண்டும் முயற்சித்தேன், வாகனங்களுக்கு  அடியில் ஒளிந்துகொண்ட அந்த பூனை குட்டியை தேடினேன், அது என் கண்களுக்கு புலப்படவில்லை.  உடையெல்லாம் வியர்வையால் நனைந்தது. இனி சாலையின் குறுக்கில் நின்றுகொண்டிருந்தால் சரியாக இருக்காது என்று தோன்றியது. சாலையை கடந்து மீண்டும் பஸ் நிறுத்ததிற்கு வந்தேன். அடடா என் பஸ் பறப்பட்டு சென்று கொண்டிருந்தது. போச்சு. இனிமே 20 நிமிடம் கழித்துதான் அடுத்த பேருந்து. இந்த வெயிலில் இன்னும் 20 நிமிடம் கழித்து தான் அடுத்த பஸ். வெயிலின் வீரியம் அதிகரித்துகொண்டிருந்தது. 

குட்டி பூனையின் நிலைமை என்னவாயிற்று, மனதில் சிறு வலியுடன்  பார்த்தேன்.  நிறுத்தி, நிறுத்தி சென்றுகொண்டிருந்த டிரைவர்களில் ஒரு நபர் மட்டும் சாலையில் அப்படியே நிறுத்திவிட்டு அந்த பூனையை கையில் எடுக்க முயற்சித்தார், முன்போலவே அந்த பூனை சீறிற்று, ஆனால் சற்றும் பயப்படாமல் இரு கைகளாலும் பூனையை திமிரவிடாமல் இறுக்கி பிடித்து தன் வாகனத்தின் பின்புறம் போட்டார். பின்னர் வாகனத்தை மேற்கொண்டு செலுத்த ஆரம்பித்தார் யாரையும் சட்டை செய்யாமல்.
ஒரு உயிரை  காப்பாற்றிய அவர் இப்போது என் கண்களுக்கு பெரிய ஹீரோவாக தெரிந்தார். இப்போது நான் என்னை நினைத்துகொண்டேன், பூனை குட்டியை காப்பாற்ற யாரும் துணியாதபோது நான் மட்டும் முயற்சிதேனே, ஆனால் அந்த பூனை குட்டியின் சீற்றத்தால் மீண்டும் காப்பாற்ற முனையாமல் பயந்து திரும்பிவிட்டேனே. கடைசியில் அந்த பூனை குட்டியையும் நான் காப்பாற்றவில்லை, நேரத்திற்கு அலுவலகமும் போகவில்லை.
உதவி செய்வதற்கு ஈரமனம் மட்டும் போதாது, தைரியமும் வேண்டுமோ.
அந்த டிரைவர் ஹீரோ தானே. 

4 கருத்துகள்:

  1. //முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

    நெகிழ்ச்சி.. //

    ஈர நெஞ்சம் உணரும் இதன் அருமை. வருகைக்கு நன்றி முனைவர். இரா. குணசீலன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  2. வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

    பதிலளிநீக்கு
  3. திகிலா இருந்தது.. அந்த போட்டோவ பாத்து எங்க நீங்க சொன்ன பூனைதானோ என்று பயந்துட்டேன்.. நல்ல வேலை..
    கடைசிக்கு பத்தி சூப்பர்..

    பதிலளிநீக்கு