செவ்வாய், 12 அக்டோபர், 2010

பொண்ணு பாக்க போறேன் - ஒரு பக்க கதை - 3


வணக்கம், வாங்க வாங்க, என்றழைத்த அந்த நபர் தான் பெண்ணின் அப்பாவாக இருக்க கூடும் என்பதை  எத்தனையோ இடங்களில் பெண் பார்த்த அனுபவம் சொல்லிற்று.    என் அப்பாவும் அம்மாவும் தங்களின் இறுகிய முகத்தை சற்று தளர்த்தி சிறிய புன்னகையை பதில் வணக்கமாய் தெரிவித்தனர்.  படலம் ஆரம்பமாயிற்று, பெண் வீட்டார் தங்களின் குடும்ப பெருமைகளை அள்ளி வீசினர். வழக்கம்போல் என் அப்பாவும் அம்மாவும் தலையை ஆட்டி அதையெல்லாம் கேட்டு வைத்தனர்.  பெண்ணின் அப்பா நேரிடையாக என்னிடம் கேட்டே விட்டார், சொல்லுங்க தம்பி, தரகர் சொன்னார், உங்க கண்டிஷன் என்ன? என்னால முடிஞ்சத செய்யுறேன்.  நான் என் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன், அவர்களின் முகம் எந்த விதமான பாவங்களையும் காட்டாமல் இறுகி இருந்தது.  நான் நிதானமாய் ஆரம்பித்தேன், சார், நான் கல்யாணம் பண்ணிக்கிற  பொண்ணு வேலைக்கு போகணும், அது மட்டுமில்லாமே அவள பெத்தவங்களும் அவளோடவே வந்துடனும், எல்லோரும் கூட்டு குடும்பமா இருக்கணும், இது தான் என் கண்டிஷன்.        பெண் வீட்டாரின் முகத்தில் ஏகப்பட்ட குழப்பம், ஒரு சிலர் என்னை பற்றி காரமாகவோ அல்லது கிண்டலாகவோ பேசினார். பிறகு  அவர்களுக்குள் விவாதித்து விட்டு, சரிங்க நாங்க இத பத்தி பேசி  ஒரு முடிவு எடுதாப்பரம் உங்களுக்கு போன் பண்றோம் என்றார் பெண்ணின் உறவினர் ஒருவர்.  என் அம்மாவும் அப்பாவும் எழுந்துகொண்டனர் அதே இறுகிய முகத்தோடு.